சுற்றி வந்த அமைச்சர்; விரட்டி பிடித்த விவசாயிகள்!

Published on
Updated on
2 min read

 போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை சந்திக்காமல் சுற்றி சென்ற அமைச்சரை விவசாயிகள் விரட்டி சென்று மறித்த சம்பவம் அறங்கேறியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலையில் விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை கடன் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியும், ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு 321-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்டம் முழுவதும் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்து வருகிறார். 

இந்நிலையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை வழியாக கூனஞ்சேரிக்கு கட்டிடத் திறப்பு விழாவிற்காக வருகை தர இருந்த அமைச்சரை சந்திக்க விவசாயிகள் போராட்ட களத்தில் காத்திருந்த நிலையில், பாபநாசம் போலீசார் இதுகுறித்து அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கபிஸ்தலம், உமையாள்புரம், திருமண்டக்குடி வழியாக கூனஞ்சேரிக்கு வரவேண்டிய அமைச்சர் விவசாயிகள் சந்திப்பை தவிர்க்க, சத்தியமங்கலம், மண்ணியார் வாழ்க்கை, திருவைகாவூர் வழியாக கூனஞ்சேரிக்கு 10 கிலோமீட்டர் சுற்றிவந்துள்ளார். 

அமைச்சர் சுற்றி வருவதை அறிந்த விவசாயிகள், அவரை வரும் வழியிலேயே மறிக்க இருசக்கர வாகனத்தில் கூனஞ்சேரிக்கு சென்றனர். திருவைகாவூர் அருகே அமைச்சரின் கார் கடந்து சென்றதைப் பார்த்து காரை பின்தொடர்ந்தது விரட்டி வந்தனர். எதிரே வந்து கொண்டிருந்த விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்து அமைச்சரின் காரை மறிக்குமாறு கூறினார். அதன்படி பட்டவர்த்தி என்னும் இடத்தில் எதிரே வந்த விவசாயிகள் அமைச்சரின் காரை மறித்து முற்றுகையிட்டனர்.

பின்னர் காரில் அமர்ந்திருந்தபடி விவசாயிகளிடம் குறைகளை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், எங்களது போராட்டத்தின் 150 வது நாளில் தங்களை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தி எடுத்துரைத்தோம். ஆனால், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. எங்களை ஏமாற்றி வரும் இந்த ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் நடத்துகிறோம் என கூறினர்.

அப்போது, "அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, விவசாயிகளின் போரட்டம் என்பது வருத்தமாகதான் உள்ளது" என்றார். "வருத்தப்பட்டு என்ன செய்வது உரிய நடவடிக்கையை எடுங்கள்" என விவசாயிகள் கூறினர். அப்போது, "ஆலையை எங்கள் வசம் ஒப்படையுங்கள். நாங்கள் நடத்துகிறோம்" என்றனர் விவசாயிகள். அதற்கு "நான் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார் அமைச்சர்.

இதையடுத்து போலீஸார் மற்றும் அமைச்சருடன் வந்தவர்கள் விவசாயிகளை சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அமைச்சர் செல்ல காருக்கு வழிவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com