கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய மாசித் திருவிழா...!

கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய மாசித் திருவிழா...!
Published on
Updated on
1 min read

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இன்று மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது, கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான பொருட்களால் அபிஷேங்கள் நடைபெற்றது. அதன்பின் நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தென்காசியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற காசி விசுவநாத கோயிலில், ஆண்டு தோறும் மாசித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி காசிவிஸ்வநாதசுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் இன்று மாசி திருவிழா தொடங்கியது. அப்போது நடைபெற்ற மஹா தீபாராதனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன்கோயிலில், பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது சிறப்பு அலங்காரங்களுடன் காமாட்சி அம்மன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், மாசி பெருவிழா பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com