சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் கணக்குகள் சம்பந்தமாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கேட்கும் விவரங்களையும் ஆவணங்களையும் வழங்காமல் கோயில் தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ள நிலத்தின் உரிமை, கோயிலின் உரிமை யாருக்கு உள்ளது என பல்வேறு கேள்விகளை கேட்டு, அதற்கான ஆவணங்களை வரும் 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் நம் மன்னர்கள், முன்னோர்களால் கட்டப்பட்ட கோயில். அது தீட்சிதர்களின் கோயில் அல்ல. கோயில் வருமானங்கள் தொடர்பாக முறையான கணக்கு கேட்கும்போது அதை வழங்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை என்றும் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ள இடம் அரசின் நிலம் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் நமது மாலைமுரசு செய்தியாளரிடம் பேசிய போது, சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த கருத்துகளுக்கு கோயில் தீட்சிதர்கள் சார்பில் தான் பதிலளிபதிலளிப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே இந்து சமய அறநிலையத்துறை, பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தில் உள்ள நடராஜர் கோயில் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை உத்தரவுகளை சட்டத்திற்கு மாறாக பிறப்பித்து வருகிறார்கள். அதற்கு நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவு அடிப்படையில் உரிய பதில்கள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.
மேலும், பொது தீட்சிதர்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் எவ்வாறு பாத்தியப்பட்டது என்பதை 1878 ஆம் ஆண்டு அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டதையும், நீதிமன்ற உத்தரவுகளையும் தெளிவாக தெரிவித்து உள்ளோம். அவ்வாறு தெளிவாக கூறியபோதும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அதை ஏற்றுக் கொள்ளாமல் சிதம்பரம் சபாநாயகர் கோயில் உரிமை பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவது வேதனைக்குரிய விஷயமாகும் என்றும், இந்து சமய அறநிலையத் துறைக்கு தீட்சிதர்கள் கடைசியாக அனுப்பிய பதில் கடிதத்தில், பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தில் உள்ள நடராஜர் கோயிலுக்கு இடையூறு செய்யும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் பொது தீட்சிதர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதற்கான சட்ட ஆலோசனை பெற்று பொது தீட்சிதர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க : வேளாண் மாணவர்களுக்கு மீன், நண்டு வளர்ப்பு பயிற்சி...