பேனா நினைவுச் சின்னத்தின் முதற்கட்ட பணிகள் தொடக்கம் - எ.வ.வேலு!

பேனா நினைவுச் சின்னத்தின் முதற்கட்ட பணிகள் தொடக்கம் - எ.வ.வேலு!
Published on
Updated on
1 min read

கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் புதிதாக புனரமைக்கப்பட்ட கொடி கம்பத்தையும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுதந்திர தின விழாவிற்கு முதலமைச்சர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற உள்ளதாகவும், சுதந்திர தின விழாவிற்கு முதலமைச்சர் தான் கொடியேற்ற வேண்டும் என உரிமையை பெற்று தந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனவும் கூறினார்.

மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தை ஆய்வு செய்தபோது துருப்பிடித்திருந்ததாக குறிப்பிட்ட அவர், கொடி கம்பத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 45 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து புதுப்பிக்கும் பணி நடைபெற்றது என்றும், இன்னும் ஓரிரு தினங்களில் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி இரண்டு கட்டங்களாக தொடங்கப்பட்டுள்ளதாக கூறியவர், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பேனா நினைவுச் சின்னம் நிறுவுவது இரண்டாம் கட்டப் பணி தான் என்றும் கூறினார். கருணாநிதி நினைவிட கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com