20 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் பொன்முடிக்கு விடுதலை அளித்த நீதிமன்றம்!

20 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் பொன்முடிக்கு விடுதலை அளித்த நீதிமன்றம்!
Published on
Updated on
1 min read

போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை பதிவு செய்த வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி கொண்ட இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து தனது மாமியார் பெயரில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, அமைச்சர் பொன்முடி அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு புருபாபு, கிட்டு என்கிற சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புப் போலீசார், கடந்த 2003 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் 2004 ஆம்  ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், தன்னை விடுவிக்கக் கோரி அதே சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடியை வழக்கிலிருந்து 2007 ஆம் ஆண்டு விடுவித்தது. உடனே, இதையெதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற உத்தரவை 2017 ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு  எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது அமைச்சர் பொன்முடியின் தாயார் சரஸ்வதி, சார்பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்தனர்.

பின்னர் பொன்முடி  உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு  நடைபெற்று வந்த நிலையில், போதிய ஆவணங்கள் ஏதும்  இல்லாததால் ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ஜெயவேல் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com