கள்ளச்சாராய விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - முதலமைச்சர் அதிரடி!

கள்ளச்சாராய விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - முதலமைச்சர் அதிரடி!
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி 16 பேர் உயிரிழந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் மற்றும் கலப்பட மது அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ள நிலையில், 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயாம் குடித்து முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் தனித்தனியாக  உடல் நிலை குறித்து கேட்டறிந்ததுடன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இதனையடுத்து கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராய மரண வழக்கில் எத்தனை பேர் உயிரிழந்தனர், இது தொடர்பாக காவல்துறை எடுத்த கைது நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த முதலமைச்சர், கள்ளச்சாராய விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, மதுவுடன் மெத்தானலை பயன்படுத்தி அருந்தியதே செங்கல்பட்டு மாவட்டத்தில்  5 பேர் உயிரிழந்ததற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com