கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம்:
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை பெரும் கலவரமாக வெடித்தது. தொடர் போராட்டங்களுக்குப்பின் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதன்காரணமாக, மாணவி உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த முடிவுகளை ஜிப்மர் மருத்துக்குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊருக்கு வந்த மாணவியின் உடல்:
இதனை தொடர்ந்து மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான கூடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாணவியின் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. உறவினர்களும், கிராம மக்களும் திரண்டு வந்து மாணவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் எம்எல்ஏ, அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உடலை புதைக்க முடிவு:
இன்று மாலை 11 மணி அளவில் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. முதலில் மாணவியின் உடல் தகனம் செய்யப்பட இருந்த நிலையில், பிறகு உடலை புதைக்க முடிவு செய்யப்பட்டது.
மாணவியின் உடல் நல்லடக்கம்:
இதையடுத்து மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கி பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் மாணவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. மாணவியின் தந்தை கண்ணீர் மல்க இறுதிச் சடங்குகளைச் செய்தார். பின்னர் மாணவியின் ஆத்மா சாந்தியடைய 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு உறவினர்களும், கிராம மக்களும் பிரியா விடை கொடுத்தனர்.