பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்ததாகத் சீமான் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், அதன் போக்கை வைத்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினார். மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்வது தொடர்பாகப் பேசியிருக்கிறோம். 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறேன் என்று முதல்வர் சொன்னதாகச் சீமான் கூறினார்.
மேலும் அவர், “தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக மருத்துவத் துறையில் மா.சுப்பிரமணியன் சிறப்பாகச் செயல்படுகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவதே பெரிய போராட்டமாக இருக்கிறது. 12ஆம் வகுப்புத் தேர்வு நடத்துவது தொடர்பாக யோசித்து வருவதாக முதல்வர் தெரிவித்தார். மாணவர்கள் உயிருக்கு பாதிப்பு என்றால் யார் பொறுப்பேற்பது. தேர்வை வைக்க வேண்டும் என்று கூறுபவர்கள் பொறுப்பேற்பார்களா. தேர்வைச் சிறிதுகாலம் தள்ளிவைக்கலாம்” என்றார்.
ஃபேமிலி மேன் 2 தொடர் வெளியானது தொடர்பாக பேசிய சீமான், “காலூன்ற முடியாத இடங்களில் பயங்கரவாதம் என முத்திரை குத்த பாஜக அரசு முயல்கிறது. எங்களது போராட்டம் பயங்கரவாதம், தீவிரவாதம் இல்லை. அது இன விடுதலைக்கான போராட்டம். சிங்கள அரச பயங்கரவாதத்தைக் கண்டிக்காத இந்த நாடு, 800க்கும் மேற்பட்ட மீனவர்களை கொன்ற சிங்கள அரசை கண்டிக்காத நாடு, எங்களைப் பயங்கரவாதிகள் என கூறி வேலை செய்கிறது. குற்றம், குறை சொல்பவர்களைக் கண்டு கொள்ளாமல் போய் விட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.