தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்...திருமாவளவன் வலியுறுத்தல்!!

தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்...திருமாவளவன் வலியுறுத்தல்!!
Published on
Updated on
1 min read

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொ.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
  
இத்திய ஒன்றிய அரசு மக்களவையில் இன்று  அறிமுகப்படுத்தியுள்ள தேர்தல் சட்டங்கள்   திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது அதை தெரிவுக்குழு பரிசீலனைக்கு அனுப்பவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்களில் நான்கு திருத்தங்களைச் செய்வதற்கு சட்ட திருத்த மசோதா ஒன்றை மோடி அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைப்பது கட்டாயம் ஆக்கப்படுகிறது. 

ஏற்கனவே 'புட்டசாமி வழக்கில்' உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு ஆதார் விவரங்களைச் சமூக நலத்திட்டங்கள் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்திய ஒன்றிய அரசு முயற்சித்தபோது அதே உச்ச நீதிமன்ற அமர்வு அதற்குத் தடை விதித்ததையும் தற்போது  சுட்டிக்காட்டுகிறோம்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் இந்த சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் அல்லது இந்த மசோதாவை தெரிவுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் வாக்காளர்களை மதம், சாதி, இனம்ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துவதற்கும் (ப்ரொஃபைலிங்),  அவர்களை மதம், சாதி  அடிப்படையில் குறி வைத்துப் பிரச்சாரம் மேற்கொள்வதற்கும்,  குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கும் வழி ஏற்படுத்திவிடும். இதனால் பாராளுமன்ற ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகும். எனவே, இந்த சட்டத் திருத்த மசோதாவை மோடி அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் மோடி அரசின் இந்த மக்கள் விரோத சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுமாறு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அறைகூவல்  விடுக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com