கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் எந்த அனுமதியும் பெறாமல் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு இருப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அருள்மிகு ஆரப்பளீஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் சிலர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2018 ம் ஆண்டு தாசில்தார் நடத்திய ஆய்வில் சுமார் 20 ஹெக்டேர் நிலத்தை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இருவர் ஆக்கிரமித்திருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு குழுவை அமைத்து எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என கண்டறிய வேண்டும். ஆனால், இதுவரை குழு அமைக்கப்படாததால் கோவில் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுத் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை நிலத்தை மீட்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் தவறு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தில் 138 ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு, அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் நெடுஞ்சாலை பணிகளுக்காக சுமார் 13 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் நெடுஞ்சாலை அமைக்க யார் அனுமதி வழங்கியது என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிக்க:ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு தடையில்லை!