மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் உதயநாளையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சைக்கிளில் பேரணியாக சென்றுள்ளனர்.
நாடு முழுவதும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் உதய நாள் ஆண்டுதோறும் மார்ச் 10 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு 54வது உதய தினம் வரும் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த வாரம் பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, மத்திய தொழிலக பாதுகாப்பு படை பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மத்திய தொழிலக பாதுகாப்பு படை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை, நேப்பியார் பாலம் அருகே உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கேற்ற இந்த சைக்கிள் பேரணியை மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் தென் மண்டல ஐ.ஜி. அஞ்சனா சின்ஹா ஐ.பி.எஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை துறைமுகத்தின் போக்குவரத்து மேலாளர் கிருபானந்தசாமி, ”மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் உதய தினத்தையொட்டி, மத்திய தொழிலக பாதுகாப்பு படையை நோக்கி இளைஞர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் இந்த சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கல்வி அதிகமாக இருப்பதாலும் பட்டப்படிப்பு படிப்பதாலும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினை சிறப்பான தொழிலாக தமிழ்நாடு இளைஞர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு அதனைவிட அதிக சம்பளத்தில், சிறந்த தொழிலை பார்த்து செல்வதால் வடமாநிலத்தவர்கள் இங்கே அதிகம் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆபரேஷன் பிடி ஆணை.... 48 மணிநேரத்தில் 1004 பிடிவாரண்ட்...!!!