சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசுகள் என வாடகை பணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 1970ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி அரசு சார்பில், ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரேஸ்கிளப், 1946ம் ஆண்டு ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்த பிரிவு ஏதும் இல்லை எனத் தெரிவித்தது. இந்த விளக்கத்தை நிராகரித்த அரசு, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கி செலுத்தும்படி உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்தும்படி, ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இந்த தொகையை செலுத்தாததால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ரேஸ் கோர்ஸ் கிளப் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்ததுடன், அதற்கான அறிவிப்பையும் வைத்துள்ளனர்.