உத்தரவிட்ட ஐநா அவை... பின்பற்றிய தமிழ்நாடு!!

உத்தரவிட்ட ஐநா அவை... பின்பற்றிய தமிழ்நாடு!!
Published on
Updated on
2 min read

மனிதர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணிகளில் ஒன்றான அபாயகரமான பூச்சிமருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.

தடை விதிக்கப்பட்ட மருந்துகள்:

உலகில் உள்ள ஜீவராசிகளில் முக்கியமானதும், மதிக்கத்தக்கதுமானதுமாக இருப்பது மனிதர்கள்.  அறிவியலைக் கண்டறிந்து உலகின் பரிணாம வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பிரதான காரணம் ஆறறிவு கொண்ட மனிதர்கள்.

மனிதம் போற்றும் பண்பாடுடைய தமிழ்நாட்டில், மனித உயிர்கள் தற்கொலை எனும் பெயரால் உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்கதையாக இருந்து வரும் சூழலில், மனித தற்கொலைகளை தவிர்க்கும் விதமாகவும், அதற்கான காரணிகளை கட்டுப்படுத்தும் விதமாகவும் அபாயகரமான உயிரைப் பறிக்கும் வல்லமை கொண்ட 6 வகையான பூச்சிமருந்துகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  

மோனோ க்ரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின், க்ளோர்பைரிஃபோஸ், சைபர்மைத்ரின் மற்றும் க்ளோர்பைரிபாஸ் ஆகிய 6 வகையான பூச்சிமருந்துகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்திய ஐநா சபை:

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா முழுவதும் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 77,000 பேர் தற்கொலை செய்திருப்பதாகவும், குறிப்பாக கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை 28,572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகவும், அதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் பிரதான காரணம் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவலாக பூச்சிக்கொல்லி மருந்துண்டு தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதை தடுக்க கடுமையான விதிகளை வகுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு அதை அமல்படுத்தியுள்ளது.  

அந்தவகையில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ள தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதால் அதை விவசாயிகள் தற்கொலைக்கான கோடரியாக பயன்படுத்துகின்றனர் என்பது கண்டறியப்பட்டு, அதை தடுக்கும் வகையில், அபாயகரமான 6 வகை பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

கோரிக்கை:

தடை செய்யப்பட்டுள்ள 6 வகையான பூச்சிக்கொல்லிகள் தான் பெருமளவில் பயன்பாட்டில் இருப்பதாகவும், அவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், மாற்று மருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பூச்சிமருந்து விற்பனையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரணத்தை கண்டறிந்து:

மேலும், அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்வதால் விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க முடியாது என்றும், தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்து, விவசாயம் செழிக்க, விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க அரசு உறுதியான, நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே விளைச்சலில் வளம் காணும் உழவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசின் கடமை:

தற்கொலை என்பதே மனித குல மாண்புக்கு எதிரானது என்ற கருத்துரு உள்ளபோதிலும், அவற்றை கட்டுப்படுத்தி குடிமக்களைக் காப்பதே அரசின் கடமை என்றும், அரசு தன் கடமையை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பதுமே பரவலாக எழும் கோரிக்கையாக உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com