அமைச்சா் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் குறித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறைகேட்டில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், அவர் வகித்து வந்த மின்சாரத்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் எதிர்ப்பை மீறி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர். என்.ரவி நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் குறித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி அந்தர் பல்டி அடித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்பது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் எனவே, சட்டப்படி கருத்து கேட்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்வாதிகார போக்கு குறித்து சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் கொடுக்கும் தொடர் இடையூறுகள் குறித்தும், உச்சநீதிமன்றத்தில் முறையிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.