சனாதன விவகாரம் குறித்த அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்கில் தற்போது உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், 28 மாநிலங்கள் வெறுப்புப் பேச்சு கண்காணிப்பு, வன்முறை தடுப்பு தொடர்பாக நோடல் அதிகாரிகளை நியமித்துள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் நியமித்துள்ளார்களா என்று தெரியவில்லை என்றார்.
இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், வெறுப்புப் பேச்சுக்களால் ஏற்படும் வன்முறையைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை செயல்படுத்த நோடல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டாரா இல்லையா என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழ்நாடு, குஜராத், கேரளா, நாகாலாந்து, மேற்கு வங்க மாநிலங்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
அப்போது மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சனாதன விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு தனிநபர் வழக்கு மீதான உத்தரவுகளை தற்போது பிறப்பிக்க முடியாது என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.