கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் உங்களது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகவும் அதனை பெற்று தருவதாகவும், அதனால் உங்களது வங்கி கணக்கில் ரூபாய் 3,500 வரை இருப்பு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பள்ளி மாணவிகள் மூன்று பேர் சக மாணவிகளின் ஒருவரது செல்போனில் இருந்து ஜி பே மூலம் ஆன்லைனில் பணத்தை செலுத்தி உள்ளனர்.
இதேபோன்று தொடர்ந்து மூன்று முறை ரூபாய் 10 ஆயிரம் வரை பணத்தை செலுத்திய மாணவிகள் சம்பந்தப்பட்ட நபரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அழைப்பை துண்டித்து விட்டார். இதேபோன்று மேலும் ஒரு மாணவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ரூபாய் 8000 பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரை விசாரித்த போலீசார் இதுகுறித்து கடலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். பணத்தை இழந்த மாணவிகள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி செல்லும் நிலையில் மாணவ மாணவிகளை குறிவைத்து பண ஆசையை தூண்டி ஆன்லைன் மூலம் மோசடிகள் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. பள்ளி மாணவிகள் பணத்தை இழந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க } ஆன்லைன் மோசடியால் மாணவி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்..!