செங்கல்பட்டு அருகே நடைபெற்ற மாநில அளவில் காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு தமிழக டிஜிபி பரிசுகளை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கம் கிராமத்தில் துப்பாக்கிச்சூடு பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு 14ம்தேதி முதல் 17ம் தேதி வரை காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டியை காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் சைலேந்திரபாபு நேற்று தொடங்கி வைத்தார். இதில் ரைபில் பிரிவு, பிஸ்டல் பிரிவு, மற்றும் கார்பைன் பிரிவு, என மூன்று பிரிவுகளின் கீழ் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்பட்டது.
மாநில அளவில் 11அணிகளாக 44பெண் காவலர்கள் உள்பட 250 காவலர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் முதலிடத்தை தமிழ்நாடு ஆயுதப்படை அணியும், இரண்டாமிடத்தை மத்திய மண்டல அணியும், மூன்றாவது இடத்தை தலைமையிட அணியும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் சைலேந்திர பாபு சுழற்கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு பணவெகுமதிகள் வழங்கினார்.
மேலும், இந்நிகழ்வில் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெயராம், தாம்பரம் காவல் ஆணையாளர் அமுல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்ப்ரனீத் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.