வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
Published on
Updated on
1 min read

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி என 6 வன சரகங்கள் உள்ளன. இதில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு மாடு மற்றும் அரிய வகையான பறவைகளும் என பலதரப்பட்ட வனவிலங்குகள் உள்ளன.

ஆண்டுதோறும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மழைக்கு முந்திய வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இதில் இந்த ஆண்டுக்கான மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வரும் 29 ம் தேதி வரை 8 நாட்களுக்கு நடைபெற இருக்கின்றது.

இதில் பொள்ளாச்சி வனக்கோட்டதிற்கு உட்பட்ட 4 வனச்சரகத்தில் 62 நேர்கோட்டுப் பாதை அமைக்கப்பட்டு 248 வனத்துறை ஊழியர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பில் மாமிச உண்ணி, தாவர உண்ணி சார்ந்த வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள், நேரடிப் பார்வை என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுப்படி கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.  

8 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் 3 நாட்களுக்கு மாமிசம் மற்றும் தாவர உண்ணி வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். மீதமுள்ள மூன்று நாட்களுக்கு வனவிலங்குகளுக்கு தேவையான தாவரங்கள் ஆகியவை கணக்கிடப்படுகிறது. இவை அனைத்தும் பதிவு செய்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com