"நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்" முதலமைச்சர் ஸ்டாலின்!!

Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டை பார்த்து தான் பல்வேறு மாநிலங்கள் சமூக நீதியை வழங்கி வருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் 2-வது தேசிய மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், திமுகவின் அடிப்படையே சமூக நீதி தான் என்று கூறினார்.  சமூக நீதி, சமதர்ம சமுதாயம் அமைக்கவே திராவிட இயக்கம் தோன்றியதாகவும். தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தால்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.தமிழ்நாட்டை பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூக நீதியை வழங்கி வருகின்றன என்றும் முதலமைச்சர் கூறினார்.

சமூக நீதியை நிலைநாட்ட திமுக தொடர்ந்து போராடும் என உறுதியுடன் கூறிய முதலமைச்சர்,  சமூக நீதியை பாஜக முறையாக அமல்படுத்தவது இல்லை என குற்றம்சாட்டினார்.ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பாஜக அரசு விரும்பவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் சாடினார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் விளிம்புநிலை மக்களை ஏமாற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடுக்கு ஆதரவாக பேசுவதாக விமர்சித்தார். இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி கருத்தியல் மலரவும்,  சமூக நீதி தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவும் தொடர்ந்து உழைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com