பெண்கள் கல்வி கற்க எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதில் அரசு கவனத்துடன் செயல்படுகிறது என்று கல்லூரி ஒன்றில் நடத்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் பயிலும் 685 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகையாக தலா 10 ஆயிரம் ரூபாயும், கல்வி உபகரணங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், "படிப்பு நமக்கு சாதாரணமாக கிடைத்தது அல்ல, எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த படிப்பு நமக்கு கிடைக்கிறது. பெண்கள் கல்வி கற்க எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதில் அரசு கவனத்துடன் செயல்படுகிறது" என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அகரம், சென்னை மேல்நிலைப் பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ஆறு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன் புதியதாக கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 370 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் 57 ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.