இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பான குற்றச்சாட்டினை எதிர்கொள்ள முடியாத சிலர், தன் மீது தவறு இருப்பதாக கூறி பதிவிடுவது எந்த விதத்தில் நியாயம் என எச்.ராஜா குறை தெரிவித்துள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கு காரணம், தற்போது பாபநாசம் எம்எல்ஏ ஆக இருக்கும் ஜவாஹிருல்லா தான் என்ற சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொய்யான கருத்துகளை பரப்பிவருவதாக எச் ராஜா மீது மனித நேயமக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது, மதுரையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷை கொன்றது அல்-உம்மா இயக்கத்தில் இருந்தவரும், தற்போது பாபநாசம் எம் எல்ஏக ஆக இருக்கும் ஜவாஹிருல்லா தான். இவர் அல்-உம்மா உறுப்பினர் மட்டும் அல்ல, அல்-உம்மாவை துவங்கியவர்களில் ஒருவர். அல் -உம்மா தடை செய்யப்பட்டதற்கு காரணமே கோவை குண்டுவெடிப்பு சம்பவம்தான் என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது அந்த இயக்கத்துடன் தொடர்புடையவரை தி.மு.க., பாபநாசத்தில் நிறுத்தியுள்ளது. தி.மு.க.,வின் கட்சி விதிப்படி அதனுடைய உறுப்பினருக்கு அவர்கள் சின்னத்தில் நிற்பதற்கு சீட் கொடுக்கலாம். ஆனால் ஜவாஹிருல்லா தி.மு.க.,வின் உறுப்பினராக இருக்க முடியாது. இவருக்கு தி.மு.க.,வின் சின்னம் கொடுக்கப்பட்டது குறித்து ஆணையத்தில் புகார் செய்யப்படும்.
முந்தைய பேட்டியில் நான் பேசியதில் ஒரே ஒரு தவறு என்னவென்றால், நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையை பற்றியது தான். அவரும் காவல்துறையில் இருந்தவர். அதனால் தவறுதலாக அவர் பெயரை கூறி விட்டேன். அது என் தவறுதான். அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கம் எனக்கு கிடையாது. மற்றபடி நான் பேசியவை அனைத்தும் உண்மையே என்றார்.
மேலும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்பது குறித்து கூறினேன். அதை எதிர்கொள்ள முடியாமல் எச்.ராஜா தவறு செய்து விட்டதாக பதிவு, அறிக்கை கொடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல் பட்ஜெட் வரட்டும் பிறகு பி.டி.ஆரின், நிதி ஆளுமை பற்றி பேசலாம் எனவும் கூறினார்.
பி.டி.ஆர். தியாகராஜன் பூர்வீகம் குறித்து நான் பேசவில்லை. அவரது பின்புலம் என்ன? யாருக்காக பேசுகிறார். யார் தூண்டுகிறார்கள்? எதற்காக இந்து கோயிலுக்கு எதிராக பேச வேண்டும், என்றுதான் கேட்கிறேன். இவர்களின் எந்த மிரட்டலுக்கும் ராஜா பயப்படமாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.