சிவகங்கை மாவட்டம் கீழடி அரசு பள்ளியில் சத்துணவில் அழுகிய முட்டையை உண்ட மாணவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அரசு பள்ளியில் இன்று மதியம் சத்துணவு முட்டை சாப்பிட்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கினர். கீழடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 362 மாணவ, மாணவியரும் 23 ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.
இன்னிலையில், இன்று மதியம் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவுடன் முட்டையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. முட்டைகள் சரிவர வேக வைக்காமலும், துர்நாற்றத்துடனும் இருந்துள்ளது. பெரும்பாலான மாணவ, மாணவியர்கள் முட்டையை சாப்பிடாமல் தூக்கி எறிந்துவிட்டனர். வேறு வழியில்லாமல் சாப்பிட்ட ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஒன்பது பேர் வரிசையாக வாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புளியை கரைத்து ஊற்றி முழுவதுமாக வாந்தி எடுக்க வைத்து பழச்சாறு குடுத்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். தகவலறிந்து திருப்புவனம் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
தலைமையாசிரியர் பாலகணேஷ் கூறுகையில் 4 மாணவர்களுக்கு மட்டும் தான் சாப்பாடு ஒத்து கொள்ளவில்லை. ஆசிரியர்களே முதலுதவி சிகிச்சை அளித்தனர். மாணவர்கள் விளையாடி கொண்டுள்ளனர் என்றார்.
மாணவர்கள் கூறுகையில் ” சத்துணவுடன் அழுகிய முட்டை தான் வழங்கப்படுகிறது. ’சாப்பிடவே முடியாது; கொழ கொழவென இருக்கும்’. நாங்கள் தூக்கி எறிந்து விடுவோம். 6-ம் வகுப்பு மாணவர்கள் பக்கத்தில் ஆசிரியர்கள் நின்றதால் வேறு வழியின்றி சாப்பிட்டு மயங்கி விட்டனர்”, என்றனர்.