குறுவை சாகுபடி விவசாயிகளுக்காக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் இழப்பீடு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்போல் உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரை நம்பி லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகி வீணாகியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13, 500 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தெளிவான உத்தரவை பிறப்பித்த பிறகும் கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீரை பெற முடியாமல் போனதே விவசாயிகள் இந்த அளவு பாதிப்பை சந்தித்தற்கு முக்கிய காரணம் ஆகும். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அத்துடன் தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துவிட்டார் போலும்.
அணையில் இருந்து திறந்துவிட்ட தண்ணீர் கடைமடை வரை செல்கிறதா ? குறுவை சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கிறதா ? என்பதை பற்றி கவலைப்படாத முதலமைச்சரை நம்பி விவசாயிகள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து போய்விட்டனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.
தமிழ்நாட்டின் ஜீவாதாரமான காவிரி நீரை பெற, சட்ட ரீதியாக மட்டுமல்லாமல் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மூலம் கர்நாடக முதலமைச்சருக்கு அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதற்கான முயற்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் எடுக்கவில்லை என்பது விவசாயிகள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
லட்சக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் குறுவை பயிர்களுக்கு உரிய நேரத்தில் காப்பீடு செய்திருந்தாலே ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை இழப்பீடு தொகை கிடைத்திருக்கும். ஆனால் பயிர்காப்பீடு செய்வதற்கான எவ்வித நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுக்காத காரணத்தினால், தற்போது அதனை பெறவும் வழியில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன
கூட்டுறவு வங்கிகளிலும் கடன் வழங்கப்படாத நிலையில், வட்டிக்கு பணம் வாங்கி சாகுபடியை செய்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய நீரை பெற்றுத் தராதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பயிர் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் கருகியதை கண்டு தன் சொந்த நிலத்திலேயே விவசாயிகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழக்கும் கொடுமையும் தமிழ்நாட்டில் தான் அரங்கேறியிருக்கிறது.
பெரும்பாலான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் கருகி விணாகிய நிலையில் ஹெக்டேர் ஒன்றுக்கு 13, 500 ரூபாய் இழப்பீடு அறிவித்திப்பது ஏற்கனவே பயிரை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
அரசு அறிவித்த நிவாரணம் உழவு செலவுக்கு கூட போதாது எனவும் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகிற்கே உணவு படைத்து வாழ வைக்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்கள் கோரும் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.”, என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க |