காஞ்சிபுரத்தில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில், அதிக பயணிகளை ஏற்றி சென்ற ஷேர் ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
கோவில் நகரமான காஞ்சிபுர மாநகரில் தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் கோவில்களை சுற்றி பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அங்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர்கள் ஆட்டோக்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆட்டோக்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களிடம் விதிகளை மீறி 10 முதல் 15 ரூபாய் வரை பெற்றுக்கொண்டு, மாணவ மாணவியர்களை ஒரே ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விபத்தை உண்டாக்கும் வகையில் பயணம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதையும் படிக்க : பீகாரில் தடம் புரண்ட பயணிகள் ரயில்... 5 பயணிகள் உயிரிழப்பு!!
இந்த சூழ்நிலையில் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவின் படி மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்ட குழுவினர், பேருந்து நிலையம், அரசு நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒரே ஷேர் ஆட்டோவில் 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்ளே அமர்ந்திருப்பதை கண்டதும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதே போல் ஆய்வின் போது, அதிக அளவில் பயணிகளை ஏற்றி சென்ற ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தும், அனுமதி சீட்டு இல்லாமல் ஒட்டிய ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்தும் மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுத்தார்.