செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு...!

செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு...!
Published on
Updated on
1 min read

செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

 சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். 

அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

இதனிடையே, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகவும், அவர் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 27-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இதனைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பணமோசடி பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஊழல் தடுப்பு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com