6 முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை சேகரிக்கிறது பள்ளிக்கல்வித்துறை. கணக்கெடுப்பின்போது கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகளை உடனடியாக அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது.
வரும் 2023- 24 ஆம் கல்வி ஆண்டில் ஆறு முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகள் ( மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் முதல் இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் குழந்தைகள் உட்பட) கண்டறிதல்,வகுப்பு மாற்ற செயல்பாடுகள்,ஆரம்பக் கல்வி பதிப்பேடு புதுப்பித்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு பணியை தொடங்குவதற்கு முன்பு துறை சார்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து குடியிருப்பு விவரங்களை உறுதி செய்திட வேண்டும் எனவும் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வீடு தவறாமல் வீடு வீடாக கணக்கெடுப்பு பணி நடத்திட வேண்டும் எனவும் இதில் ஆறு முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கையை மிகச் சரியாக பதிவு செய்திட வேண்டும் எனவும் தெருவோரம் வசிப்பவர்கள் வீடற்றவர்கள் உள்ளிட்டவர்களின் பள்ளி செல்லாக் குழந்தைகள் இருக்கிறார்களா என்பதையும் கண்டறிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக தொழிற்சாலை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு நடத்திடும் போது குழந்தைத் தொழிலாளர் நலத்துறை,மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் காவல் துறையுடன் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கணக்கெடுக்கின் போது கொரோனா காரணமாக இறந்த பெற்றோர்களின் விவரங்களையும் சேகரித்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனோடு கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகளை உடனடியாக அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கணக்கெடுப்பு பணி ஏப்ரல் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களிலும், மே மாதம் இறுதி வாரத்திலும் நடைபெற வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கப்படாத வகையில் கள ஆய்வில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.