மக்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் ஆபாச இணையதளங்களையும் மத்திய அரசு முடக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சபாநாயகம் என்பவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட செயலியால் சுமார் 90 லட்சம் ரூபாய் தொகையை இழந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்டதாக நாம் அறிகின்ற செய்தி வேதனையளிக்கிறது. சூதாட்டத்திற்கு தடை என்று சொல்லும் போது, அனைத்துவித ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதித்திட வேண்டும். முக்கியமாக நான் ஏற்கெனவே பலமுறை தெரிவித்தது போல, இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆபாச இணையதளங்களையும் முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, சிரியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆபாச இணையதளங்களை அங்குள்ள குடிமக்கள் பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாத வகையில் ஒட்டுமொத்த நாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் தடையை மீறி செயல்படுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் விதியும் நடைமுறையில் உள்ளதாக கூறினார்.
காலத்திற்கேற்ப தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியை நோக்கிப் பயணித்தாலும், எல்லையின்றி பரந்து, விரிந்து உலகத்தை இணைத்திருக்கும் இணையதளத்தை, இந்தியாவிலும் தீவிரமாக கண்காணித்து, தடைசெய்வது மிகுந்த அவசியம் என அறிவுறுத்திய அவர் மாநிலங்களுக்குள் செயலிகளுக்கு தடை என்றிருந்து, மத்தியில் செயலிகளுக்கு அனுமதி என்றிருந்தால் அதில் பயன் கிடையாது எனக்கூறினார். எனவே, அனைத்துவித ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கும், ஆபாச இணையதள செயலிகளுக்கும் நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முடிவெடுத்து முழுமையான தீர்வு காண வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டார்.