கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில், மதமாற்றத்தை தடுக்க அனைத்து இந்துக்களும் பாடுபட வேண்டும், என மோகன் பகவத் பேசியுள்ளார்.
கோவை மாவட்டம் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில் உலக நலன் கருதி திருசக்தி மகாயாகம் மழை வேண்டி வர்ண பகவான் வழிபாடு நூல் வெளியீட்டு நடைபெற்றது. இந்த விழாவில் அகில இந்திய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
இதனை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் பெற்றுக்கொண்டார். பின்னர் இந்த விழாவில் பேசிய ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார ரீதியில் இருந்தாலும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது, என பேசியுள்ளார்.
மேலும், உலகின் எல்லா பக்கங்களிலும் இந்து கோவில்கள் உள்ளன. நமது கருத்துகளை மதத்தின் சாரத்தை அங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. தமிழகத்தில், ராஜ ராஜா சோழன் கடல் கடந்து சென்று கோவில்களை நிர்மாணம் செய்தான். அதன் மூலம் அங்கெல்லாம் நமது கருத்துகள் பரவி உள்ளது. இதன் கருத்து தான் கம்போடியா எனும் புத்தகம், எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வேற்றுமையில் ஒற்றுமை என்பது, இந்து தர்மத்தின் சிறப்பு. பாரதத்தில் உண்மை தூய்மை, அன்பு, தவம் ஆகிய நான்கு கருத்துகள் இந்து மதத்தில் முக்கியமானது. மேலும் அவற்றை வளர்க்க வேண்டும். யாரையும் வெற்றி கொள்ள வேண்டியதில்லை, மாறாக நமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். மதமாற்றம் என்பது நம்மிடம் இருந்து துவங்க வேண்டும். நாம் நமது குடும்பம், உறவினர்கள் மதமாற்றத்தை தடுக்க வேண்டும். அவர்கள் இந்த கருத்துக்களை அனைவருக்கும் எடுத்து கூறவேண்டும், என மோகன் பகவத் கூறியுள்ளார்.