சந்திரபாபு நாயுடு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக விளக்க அறிக்கை கொடுக்க வேண்டுமென ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.
கங்கையின் தங்கை என்று அழைக்கபடும் புதுச்சேரியில் ஓடும் சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா கோலகலமாக நடந்து வருகிறது. இதில் இன்று அதிகாலை ஆற்றங்கரையில் நடந்த தீபாராதனையின் போது நடிகையும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "நடிகர் ரஜினி அரசியல் வேண்டாம் என முடிவு செய்து விட்டார். வேண்டாம் என முடிவு செய்த பின்னர் அரசியல் குறித்து பேசக்கூடாது. என்.டி.ஆர் அனைவருக்கும் பிடித்தமான நடிகர் அவரை ஆந்திராவில் கடவுளாக பார்ப்பார்கள். அவரை சந்திரபாபு நாயுடு எப்படி கொன்றார். அவரது கட்சியை எப்படி எடுத்துக்கொண்டார் என அனைத்தும் ரஜினிக்கு தெரியும். இருந்தும் என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அவர் பேசி உள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.
மேலும் ஆந்திராவில் உள்ளவர்கள் ரஜினியை சூப்பர் ஸ்டாராகவும், நல்ல நடிகராகவும் நினைத்ததாகவும், ஆனால் அவரின் பேச்சால் என்.டி.ஆர் ரசிகர்கள் ரஜினி மீது கோபமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.