தொடர் மழையின் காரணமாக குன்னூர் பழங்குடி கிராமனா செங்கல் கோம்பை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வெளியே வர முடியாமல் தவித்த பழங்குடியினரை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்பு.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக பெய்து வரும் மழையால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண் மற்றும் பாறைகள், மரங்கள் சாலைகளில் விழும் அபாயம் ஏற்பட்டது.
இதனால், குன்னூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் மண்சரிவு ஏற்படும் இடங்களில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி, பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். சாலைகளில் விழுந்த மரங்களை JCB உதவியுடன் அப்புறப்படுத்தி வாகனங்களை போக்குவரத்து நெரிசலின்றி அனுப்பி வருகின்றனர்.
மேலும், கோவையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 60 பேர் வந்துள்ளனர். குன்னூரில் 30 பேரும் கோத்தகிரியில் 30 பேரும் வந்து மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
இன்னிலையில், செங்கல் கோம்பை பகுதியில் உள்ள பழங்குடியினர் சிலர் நிலச்சரிவில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்துக்கொண்டு இருந்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர், வருவாய்துறையினர் வனத்துறையினர் இணைந்து பத்திரமாக மீட்டு 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உலிக்கல் பேருராட்சிக்கு உட்பட்ட செங்கல் புதூர் அங்கன்வாடி மையத்தில் ஆறு பேரை தங்க வைத்துள்ளனர்.
தொடர்ந்து,அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.