76வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3ம் ஆண்டாக தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி ஆகஸ்ட் 4,10,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர தினத்தன்று முதல்வரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்படும். இதற்காக கமாண்டோ படை, குதிரைப் படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட படைப்பிரிவினர் பங்கேற்கும் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது போன்று ஒத்திகை நடத்தப்படும்.
பின்னர், தகைசார் தமிழர் விருது, ஏபிஜே அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும். மேலும் ஒத்திகை நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:ஒசூர் -பெங்களூர் இடையே மெட்ரோ!