உதகையில் தோடர் இன மக்களுடன் இணைந்து ராகுல் காந்தி உற்சாக நடனமாடியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்ததால் மீண்டும் ராகுல் காந்தி எம்பி பதவியை பெற்று நாடாளுமன்றம் சென்று உரையாற்றினார். இந்நிலையில் அவரது தனது தொகுதியான வயநாட்டை பார்வையிட செல்வதற்காக இன்றும் நாளையும் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு செல்லும் வழியில் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்திருந்தார். கோவையில் இருந்து கோத்தகிரி மார்க்கமாக கார் மூலம் மைனலா வந்த தனியார் தங்கும் விடுதியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த தங்கும் விடுதியில் நீலகிரியில் பிரசித்தி பெற்ற ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கும் முறையை கேட்டறிந்தார். இதனை அடுத்து மீண்டும் கார் மூலமாக உதகை சேரிங்கிராஸ் பகுதியில் ராகுல் காந்திக்கு நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் சாலை மார்க்கமாக தலைக்குந்தா அருகே உள்ள முத்த நாடு மந்து தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்தடைந்தார். அவ்வாறு வந்த ராகுல் காந்திக்கு தோடர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிவித்து பாரம்பரிய இசையுடன் அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களது குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் தோடர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார்.
தொடர்ந்து தோடர் இன மக்களோடு கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியை முடித்த ராகுல் காந்தி உதகையில் இருந்து சாலை மார்க்கமாக கூடலூர் பகுதிக்கு சென்று அங்கிருந்து தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு செல்ல உள்ளார்.