வேங்கைவயல் விவகாரம்
புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலரை சந்தித்து மனு அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு குடிநீர் தொட்டியில் மலம் கலந்த உண்மை குற்றவாளிகளை கண்டறிய டேங்க் ஆப்ரேட்டர்கள், வார்டு உறுப்பினர்களை விசாரணைக்கு உட்படுத்துவதோடு குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.
10 லட்சம் 2 ஏக்கர் நிலம் : உரிய நடவடிக்கை
மேலும், பாதிக்கப்பட்ட வேங்கைவயல் ஆதிதிராவிட மக்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், இரண்டு ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும் என கூறிய அவர், விசாரணை எனும் பெயரில் பாதிக்கப்பட்ட மக்களை குற்றத்தை செய்ததாக ஒத்துக் கொண்டால் அரசு வேலை தருவதாகவும், பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறியும் மிரட்டியும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியை நியமித்து நேர்மையான விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றும் அவர் கூறினார்.