பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு, ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வருகிற டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்தவகையில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு, ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள கோவில்கள், புனித ஸ்தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தஞ்சை: பரவலாக பெய்த மழை...குஷியான பொதுமக்கள்!
இந்நிலையில், பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால், பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு சோதனையிடும் கருவிகளைக் கொண்டு பாலத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம், ரயில் பாலத்தில் ரயில்வே ஊழியர்கள் தவிர அன்னியர்கள், மீனவர்கள் செல்ல வேண்டாம் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர். இதேபோல் ராமேஸ்வரம் ரயில் நிலையம் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில், அப்துல் கலாம் மணிமண்டபம் உள்ளிட்டவற்றில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.