ரூட் க்ளியர்... ஓபிஎஸ்ஸை வெளியே அனுப்பனும்... கட்சியை மொத்தமா கைப்பற்றனும்!! எடப்பாடி பலே ஸ்கெட்ச்!!

ரூட் க்ளியர்... ஓபிஎஸ்ஸை வெளியே அனுப்பனும்... கட்சியை மொத்தமா கைப்பற்றனும்!! எடப்பாடி பலே ஸ்கெட்ச்!!
Published on
Updated on
2 min read

எதிர்கட்சி தலைவராக உருவெடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை கழற்றிவிட்டு விட்டு, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, ஒரே தலைமையின் கீழ் இயங்குவதற்கு ஏதுவான வேலைகளில் இறங்கியுள்ளாராம். 

2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியானதில்,  சுமார் 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அதிமுக தனது பலத்தை இழந்தது. ஆனால் பலமான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. இதற்கு காரணம் இபிஎஸ்ஸின் 4 ஆண்டு கால உழைப்பு தான் என்று சொல்லப்படுகிறது. கட்சியில் பிளவுகள் ஏற்பட்டபோதும், அவர் முன்னின்று நீக்க வேண்டியவர்களை நீக்கி, சேர்க்க வேண்டியவர்களை இணைத்து கட்சியை வழிநடத்தி சென்றது தான் என கூறப்படுகிறது.

குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பின், ஒ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை நோக்கி செல்ல, கட்சியை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த மன்னார்குடி குடும்பத்தையும் வெளியேற்றி, கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.. இவரது ஆட்சியில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவருக்கு எதிராக எதிர்ப்புகள் வராத வண்ணமும் பணியாற்றி இருந்தார். 

அதேவேளையில் ஜெயலலிதாவால் இரு முறை முதல்வராக அறிவிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ், ஒரு பக்கம் கட்சிக்குள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் இருந்தார். தேர்தலில் தோல்வியடைந்த பிறகும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓ.பி.எஸ் போட்டி போட்டாலும், எல்லா தடைகளையும் தாண்டி ஈ.பி.எஸ். எதிர்க்கட்சி தலைவரானார். இப்படி, அதிமுகவில் மேலும், மேலும் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார் ஈ.பி.எஸ். ஆனால், ஓ.பி.எஸ்-க்கு இருக்கிற ஒரே பிடிமானம், அவர் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பதுதான். ஓ.பி.எஸ்.சும் இதை வைத்துக்கொண்டு கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று செயல்படுகிறார்.

இருப்பினும் அதிமுகவுக்கு ஸ்திரமான தலைவர் இல்லாதது ஒரு குறை தான். ஆனால் தற்போதைய சூழலில் கட்சியிலிருந்து பலர் விலகி செல்லாமல் இருக்க கூட்டுத் தலைமையின் ஆளுமை அவசியம் என்று கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்று, அதிமுகவில் பலமிக்க ஒருவராக வலம் வரும் இபிஎஸ்,  கூட்டுத் தலைமை கூடாது. இந்த கூட்டுத்தலைமையால் நெருக்கடி நேரத்தில் உடனடியாக உறுதியான முடிவு எடுக்காமல் போவதாக தெரிவித்து வருகிறார். இதனால் திமுகவின் அதிகாரமிக்க பொதுச் செயலாளராக ஒற்றைத் தலைமையாக தன்னை நிறுவிக் கொள்வதற்கான முயற்சிகளை இபிஎஸ் மேற்கொண்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி அதிமுகவில் 2 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இபிஎஸ் தீவிரமாக உள்ளாராம். ஒன்று சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவானவர்களை நீக்குவது. மற்றொன்று ஓ.பி.எஸ்-க்கு ஆதரவானவர்களை ஓரம் கட்டுவது தானாம். 

ஆனால் ஓபிஎஸ்ஸோ, எடப்பாடியாரை முந்திக்கொண்டு எப்படியாவது தென் மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய தலைவர்களை ஒருங்கிணைத்து கட்சித் தலைமையை பிடித்து விட வேண்டும் அல்லது தனது பிடி தளராமல் இதே நிலை நீடிக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். அது மட்டுமல்ல, சசிகலாவுடன் சென்றவர்களையும் அதிமுகவுக்குள் சேர்க்க முயன்றுவருதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே தென் மாவட்டத்தில்  மட்டும்தான்  ஈ.பி.எஸ்ஸுக்கு பலம் இருப்பதை அறிந்து கொண்ட எடப்பாடியார், மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் தனக்கு ஆதரவு  இருப்பதையும் அறிந்து வைத்துள்ளதோடு, அதனை பயன்படுத்தி அங்குள்ள  மாவட்ட பொறுப்பாளர்கள் வாயிலாக தென் மாவட்டங்களை தன் பக்கம் திருப்ப அசைன்மெண்ட் கொடுத்துள்ளாராம் எடப்பாடியார். 

எது எப்படியோ, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டு தான் வருகின்றது... கட்சி நிலைத்திருந்தால் போதும் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்..

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com