சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையின் காரணமாக குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர், 3 நாட்கள் ஆகியும் வடியாததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததை அடுத்து சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகளான செம்மஞ்சேரி, வேளச்சேரி, மேடவாக்கம், தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பில் மழை நீர் தேங்கி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிக்க : தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு...!
தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வருவதாலும், மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாததாலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து வெள்ள நீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் மக்களை படகுகள் மூலம் மீட்டும், ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் நிவராணப் பொருட்களை வழங்கியும் வருகின்றனர்.
இந்நிலையில் மழை நின்று மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் மழை நீர் வடியாததால் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வடிகால்வாய்களை சீரமைக்க வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.