சென்னை மாநகராட்சியில் 2022-23 நிதியாண்டுக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரியினை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும் 200 வார்டுகளும் உள்ளது. இவற்றில், மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் 2022-23 நிதியாண்டு வருகின்ற மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், சொத்து வரி மற்றும் தொழில் வரி நிலுவையில் வைத்துள்ளவர்கள் விரைந்து செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த கால நிலுவைத் தொகை உட்பட, இந்த நிதியாண்டில் சொத்து வரி 1500 கோடி மற்றும் தொழில் வரி 500 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், சுமார் 1390 கோடி சொத்து வரியும் 412 கோடி தொழில் வரியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி கால அவகாசம் முடிவதற்குள் வரி நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் 2% அபராதம் விதிக்கப்படும் எனவும் நீண்டகாலமாக செலுத்தாதவர்களின் சொத்துக்கள் சீல் வைக்கப்படும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீண்ட காலமாக வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களின் விவரங்களும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 2023-24 நிதியாண்டு தொடங்க உள்ளதால் அந்த வரியினை முதல் 15 நாட்களுக்குள் செலுத்தும் மக்களுக்கு வரி சலுகைகள் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஒரு தொடக்கமாக இருக்கும் என நான் கருதுகிறேன்....பிடிஆர்!!