"கொடநாடு வழக்கில் யாராக இருந்தாலும் சும்மா விடக் கூடாது" ஓபிஎஸ் பேச்சு!
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, "கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதியன்று, கொள்ளை முயற்சி நடந்தது. இதைத் தடுக்க சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடே பரபரப்பில் மூழ்கியது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க.விற்க்குள்ளும் உள்கட்சி பூசல் கோஷ்டி மோதலாகி, போர்க்களமாகவே மாறியது. அ.தி.மு.க.வை யார் நிர்வகிப்பது என்ற போட்டியில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிரடியாக வெளியேற்றி விட்டு இருக்கையை கைப்பற்றினார் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது செல்லாது என இதுநாள் வரை கூறிக் கொண்டிருந்தவர் தற்போது கொடநாடு கொலை வழக்கை கையில் எடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.