முதலமைச்சரை சந்தித்த நொச்சிக்குப்பம் மீனவர்கள்...!!

முதலமைச்சரை சந்தித்த நொச்சிக்குப்பம் மீனவர்கள்...!!
Published on
Updated on
2 min read

மீனவர் பிரச்சனையை சுமுகமாக முடிக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சரை நொச்சிக்குப்பம் மீனவர்கள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைப்பதாலும், அங்கு மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையும் போக்குவரத்து பாதிக்கப்படவதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வு முன் கடந்த 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய  நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் நொச்சிக்குப்பம் பகுதியில் சாலையில் இருந்த மீன் கடைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது லூப் சாலையில் படகுகள், கட்டைகளை போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். மீனவர்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே மீனவர்களுடன் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆணையர் ககன்தீப் சிங் பேடியுடன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் மீனவர்கள் தரப்பு வாதங்களை கேட்டறிந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அதனை நீதிமன்றத்தில் எடுத்துரைக்க ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.

இதையடுத்து போக்குவரத்துக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல்  தங்கள் விற்பனையை தொடரலாம் என அப்பகுதி மக்களுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த நொச்சிக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள அப்பகுதி மீனவர் சங்க நிர்வாகிகள் மயிலை சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு உடன் வந்து முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com