தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது என்று திமுக துணைப்பொதுசெயலாளர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சர்ச்சை :
சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்று கூறக்கூடாது, தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார். இது தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழ்நாடு, அண்ணா உள்ளிட்ட முக்கியமான தலைவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு ஆளுநர் உரையை வாசித்தார். இதனால் மு.க.ஸ்டாலின் உடனடியாக் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். அதன்பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொங்கல் பரிசு வழங்கிய கனிமொழி :
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நம்ம ஊரு திருவிழா கலைக் குழுவினருக்கு திமுக துணைப்பொதுசெயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
யாருக்கும் உரிமை கிடையாது :
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தமிழ்நாடு என்ற பெயர் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அண்ணா வைத்த பெயர் ஆகும். அதனால் தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியை வம்பிழுப்பது ஆளுநர்கள் தான் :
தொடர்ந்து பேசிய அவர், சில மாநிலங்களில் ஆளுநர்களை முதலமைச்சர்கள் வம்புக்கு இழுப்பது வாடிக்கையாகி விட்டது என புதுச்சேர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆனால், உண்மையில் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் தான் ஆளும் கட்சியை வம்புக்கு இழுப்பதாக குற்றம் சாட்டினார்.