என்.எல்.சி. விவகாரம்: பிரமாண மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

என்.எல்.சி. விவகாரம்: பிரமாண மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!
Published on
Updated on
2 min read

என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், என்.எல்.சி. நிறுவனத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் 2 சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007ம் ஆண்டு கையகப்படுத்தியது.

இந்த வாய்க்கால் வெட்டும் பணியின் போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, நிலத்தை கையகப்படுத்தி 16 ஆண்டுகளாக அதனை சுவாதீனம் எடுக்காமல், சாகுபடி செய்ய அனுமதித்த அரசு, திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அறுவடைக்கு இரு மாதங்கள் உள்ள நிலையில் பயிர்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி, கையகப்படுத்திய நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் அதை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதால், நிலத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் இழப்பீடு கொடுக்கப்பட்டு, 2012ம் ஆண்டு  சுவாதீனம் எடுக்கப்பட்டது. இந்த பகுதியில் 32 ஹெக்டேர் நிலம் சுவாதீனம் எடுக்கப்பட்ட நிலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தான் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக விளக்கினார்.

ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு பெற்ற பின் அந்த நிலம் அரசுக்கு சொந்தமாகி விடுகிறது. அதில் தொடர்ந்து நீடிப்பது அத்துமீறல் எனத் தெரிவித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், அறுவடைக்கு பின் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மின் தேவையை ஈடுகட்ட போதுமான நிலக்கரி இல்லாததால் கையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் 2007ல் நிலத்தை சுவாதீனம் எடுக்க ஒப்புதல் தெரிவித்து விட்டு இப்போது  வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். மேலும், அரசியலுக்காக இந்த விவகாரத்தை பயன்படுத்துவதாகவும், அரசியல் கட்சியினர் அங்கு சென்றிருக்காவிட்டால் எந்த பிரச்னையும் எழுந்திருக்காது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து என்.எல்.சி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அறுவடை செய்த பின், 2023 ஜனவரியில் நிலம் சுவாதீனம் எடுக்கப்படும் என 2022ம் ஆண்டு டிசம்பர் மாதமே அறிவிக்கப்பட்டது. இந்த கால்வாய் அமைக்காவிட்டால், பருவமழை காலத்தில் சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்து பெருத்த சேதம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சேதமான பயிருக்கு இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும், பழைய நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்துக்கு புதிய சட்டம் பொருந்தாது என்பதால், பயன்படுத்தாத நிலத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என கோர முடியாது என்றார்.

இதையடுத்து, அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைத்து விடுவீர்களா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, கையகப்படுத்திய பின் நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள்? என என்.எல்.சி. தரப்புக்கும் கேள்வி எழுப்பினார்.

வேலி அமைத்திருக்க வேண்டும் அல்லது ஆட்களை நியமித்து கண்காணித்திருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், என்.எல்.சி. தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளார்.

 கால்வாய் தோண்டும் பணியை தொடரலாம் எனத் தெரிவித்த நீதிபதி, அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளிவைத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com