ராஜேந்திர பாலாஜி மீது புதிய புகார்.. இந்த முறை எவ்வளவு பணம்?.. என்ன கேஸ் தெரியுமா?

அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திர பாலாஜி மீது புதிய புகார்..  இந்த முறை எவ்வளவு பணம்?.. என்ன கேஸ் தெரியுமா?
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளரான சுதாகரன் தனக்கு நெருங்கிய நண்பர் எனவும், அவர் ராஜேந்திர பாலாஜியிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அரசு வேலை தேடி கொண்டிருந்த நபர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பெற்று அமைச்சரின் உதவியாளர் சுதாகரன் என்பவரிடம் தலைமை செயலகத்தில் வைத்து வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பல ஆண்டுகளாகியும் வேலை வழங்காமல் இருந்ததால் சந்தேகமடைந்து உதவியாளர் சுதாகரிடம் அதுகுறித்து கேட்டபோது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பணம் முழுவதையும் கொடுத்துவிட்டதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெகுநாட்களாகியும் வேலை கிடைக்காததால் பணம் கொடுத்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து பணத்தை திரும்ப பெற ராஜேந்திர பாலாஜியை சந்தித்ததாகவும், ஆனால் அவர் பணத்தை தராமல் சமரசம் செய்து அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் பணம் கேட்டு உதவியாளர் சுதாகரன் அவரது மனைவி தேவிஸ்ரீயிடம் கேட்டப்போது, ராஜேந்திர பாலாஜியின் உதவியாளராக தற்போது இல்லை எனவும் அவரிடம் தான் பணம் இருப்பதாகவும் அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் ஆட்களை வைத்து கொலை செய்து கூவத்தில் வீசிவிடுவேன் என மிரட்டியதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.

எனவே மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உதவியாளர் சுதாகரன், அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோரிடம் இருந்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும், கொலை மிரட்டல் விடுத்த சுதாகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அந்த புகாரில் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com