சேலம் மாவட்டம் மேட்டூரில், நீட் தேர்வு அச்சத்தில் மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மேட்டூர் அடுத்த கூலையூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது 2வது மகனான தனுஷை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும் என தீராது முயற்சித்து வந்தார். ஏற்கனவே தனுஷ் இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியை தழுவியிருந்தார். இந்நிலையில் நடப்பாண்டும், மாணவன் தனுஷ் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று அவர், மேச்சேரியில் உள்ள காவேரி பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்வு எழுத இருந்தார்.
மேலும் இந்த நீட் தேர்வில் தேர்வாகி மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என கண்டிப்புடன் கூறியிருந்த அவரது தந்தை, அவனை தேர்வுக்கு தயாராகவும் அறிவுறுத்தியுள்ளார். இதையொட்டி அவர் நேற்று இரவு முழுவதும் நீட் தேர்வுக்கென தயாராகி வந்துள்ளார். இந்தநிலையில் இன்று காலை சிறுவனின் தந்தை, அவனது அறைக்கு சென்று பார்த்தபோது, அவன் தூக்கில் தொங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் அவன் பயன்படுத்திய செல்போன் சிம்கார்டும் உடைத்து வீசப்பட்டிருந்தது.
இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் தகவல் அறிந்து வந்த கருமலைக்கூடல் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் உறவினர்கள் சூழ்ந்து பரபரப்புடன் காணப்படுகிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு பயந்து போய் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கிராமத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.