நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குள்ள நிலுவையில் ஆளுநர் கையெழுத்திட மாட்டேன் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நீட்டுக்கும் ஆளுநருக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்று தென்காசியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பொதிகை விரைவு ரயில் மூலம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்காசி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இன்னும் மருத்துவக் கல்லூரி வராமல் இருப்பதற்கு காரணம் ஒன்றிய அரசுதான். ஒன்றிய அரசு அனுமதி கொடுக்காததால் தான் மாவட்ட மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு காலதாமதம் ஆகி வருகிறது. தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு சமூக ஆர்வலர் ஒருவர் 16 ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்க தயாராக இருக்கிறார் என தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் பேசி இருப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், நீட் தேர்வு விலக்கு மசோதாவானது தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்ள சூழலில், ஆளுநர் நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்திட மாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கும், ஆளுநருக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை. குடியரசுத் தலைவரிடம் இருந்து ஆளுநருக்கு இனி தகவல் மட்டுமே அனுப்பப்படும். அரசின் நலத்திட்டங்களை அரசோடு இணைந்து மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய ஆளுநர் அரசியல் செய்வது போல் எதிராக செயல்படுவது உள்நோக்கம் பொருந்தியதாகவே உள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.