சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக குடியரசு தலைவர் வருகை தருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள கடல் சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.
மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரும் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்லும் குடியரசுத் தலைவர், அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
அதன்பின் நாளை காலை 9 மணியளவில், ஆளுநர் மாளிகையில் சில முக்கிய பிரமுகர்களை குடியரசுத் தலைவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, ஓஎம்ஆர் சாலை உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 8 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் மதியம் 12 மணி அளவில் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
இதற்கிடையில், ஆளுநர் மாளிகை மீது நேற்று பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் பலப்படுத்தி உள்ளனர். ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் தங்க வைக்கப்படுவாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.