எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்!

Published on
Updated on
1 min read

மறைந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமை புரட்சிக்கு வித்திட்டவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் சென்னையில் உள்ள பெசண்ட் நகர் மின்மயானத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டது.

இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் ஒருவரும், பசுமை புரட்சிக்கு வித்திட்டவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று முன்தினம் வயது மூப்பு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். இதனையடுத்து அவரது பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக சென்னை, தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வைக்கப்பட்டது.  

கடந்த 2 நாட்கள் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று நண்பகல் அவரது உடல் தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி காவல்துறை மரியாதையுடன் தரமணியில் இருந்து வாகனம் மூலமாக  சென்னை, பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது. 

பெசண்ட் நகர் மின்மயானத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக 10 காவலர்கள் தலா 3 முறை துப்பாக்கியால் வான் நோக்கி துப்பாக்கியால் சுட மொத்தம் 30 குண்டுகள் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள்கள் சௌமியா, மதுரா, நித்யாராவ் உள்ளிட்ட குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கேரள அமைச்சர்கள் கிருஷ்ணன் குட்டி, பி.பிரசாத், தெலங்கானா அமைச்சர் நரேந்திர ரெட்டி ஆகியோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது உடல் பெசண்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com