முகமது அப்பாஸ் வழக்கு ''காவல்துறையும், சிறைத்துறையும் பதிலளிக்க உத்தரவு''!

முகமது அப்பாஸ் வழக்கு ''காவல்துறையும், சிறைத்துறையும் பதிலளிக்க உத்தரவு''!
Published on
Updated on
1 min read

என்.ஐ.ஏ. வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட வழக்கறிஞரை, மற்றொரு வழக்கில் சிறையிலேயே கைது செய்தது குறித்து தமிழக காவல்துறையும், சிறைத்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும் கூறி மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தது. இதனையடுத்து இவ்வமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்திருந்தது. இவர்களுக்கு வழக்குகளை நடத்தி வந்த வழக்குரைஞர் முகமது அப்பாஸ் என்பவரும் தேசிய புலனாய்வு முகமையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் மீது தேசிய புலனாய்வு முகமை பதிந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை ஜாமீனில் விடுவித்து ஆகஸ்ட் 1ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்படி பிணை பத்திரம் தாக்கல் செய்து, ஜாமீனில் வருவதற்கு முன்பாகவே, முகமது அப்பாசை மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தினர் சிறையிலேயே கைது செய்தனர்.

இதுதொடர்பாக அவரது சகோதரர் எம்.சையது முகமது அபுதாஹிர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், முகமது அப்பாஸ் மீது மதுரை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக கூறி, விளக்குத்தூண் காவல் நிலையத்தினர் சிறையிலேயே கைது செய்துள்ளதாகவும், பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் மூலம் ஜாமின் பிணை பத்திரம் சிறைத் துறையினருக்கு அனுப்பபட்ட நிலையில், அதை பெறுவதற்கு முன்பே மற்றொரு வழக்கில் காவல்துறையினர் கைது செய்தது சட்டவிரோதம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே முகமது அப்பாஸ் கைதை சட்டவிரோதமானதாக கருதி, அவரை விடுவிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, முகமது அப்பாஸுக்கு நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவுடன் சிறைக்கு செல்வதற்கு முன்பே, மற்றொரு வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறுவதால், அவரது வழக்கறிஞர்கள் சிறைக்கு சென்றதாக கூறப்படும் ஆகஸ்ட் 1 மட்டும் 2ஆம் தேதிகளின் சிசிடிவி காட்சிகளை சிறைத்துறை பத்திரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், ஆட்கொணர்வு மனு குறித்து சிறைத்துறை மற்றும் காவல்துறை ஆகியவை மறுநாள் விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com