"மோடி விமானி இல்லாமல் கூட வெளிநாடு செல்வார் அதானி இல்லாமல் செல்லமாட்டார்" உதயநிதி காட்டம்!

"மோடி விமானி இல்லாமல் கூட வெளிநாடு செல்வார் அதானி இல்லாமல் செல்லமாட்டார்" உதயநிதி காட்டம்!
Published on
Updated on
2 min read

மோடி விமானி இல்லாமல் கூட வெளிநாடு செல்வார் அதானி இல்லாமல் செல்லமாட்டார் என பிரதமரின் வெளிநாட்டு பயணம் குறித்து உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.

மயிலாடுதுறையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கழக செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக மூத்த முன்னோடி உறுப்பினர்கள் ஆயிரம் பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் பொற்கிழியும், மாற்றுத்திறனாளியினர் 60 நபர்களுக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

முன்னதாக விழா மேடையில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கூறுகையில், "நான் பிறந்தது சென்னை மாவட்டமாக இருந்தாலும், என்னுடைய தாய் மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரத்தின் போது எனது பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி என்னை கைது செய்ததும் இந்த மாவட்டத்தில் தான். இங்கு ஆரம்பித்த எனது பிரச்சாரம் தான் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து திமுக ஆட்சி அமைக்க அடித்தளமிட்டது" என தெரிவித்தார்

மேலும் "நம்முடைய முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இதை பொறுக்காத ஒன்றிய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் ED,IT,CBI மூலம் அச்சுறுத்தி வருகின்றனர். நாங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சந்தித்தவர்கள் இதற்கெல்லாம்  அச்சப்பட மாட்டோம். அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து நமது முதல்வர் ஒன்றிய அரசை எதிர்ப்பதால், இது போன்ற அழுத்தத்தை  மோடி அரசு கொடுக்கிறது. ஒன்றிய பாஜக மற்றும் அதிமுக வால் திமுகவில் உள்ள சாதாரண கிளை செயலாளரை கூட தொட்டுப் பார்க்க முடியாது என கூறினார்.

தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.ஏன்.ரவி தனக்கு கொடுத்த வேலையை விட்டுவிட்டு அனைத்து வேலைகளையும் செய்து வருவதாகவும் , தமிழ்நாட்டின் பெயரை அவர் மாற்ற நினைப்பதாகவும் கூறினார். மேலும், ஆளுநருக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  எனவும் தெரிவித்தார். உலகின் பணக்கார பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அதானி மோடியின் நெருங்கிய நண்பர் என்றும், பிரதமர் மோடி எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் விமானி இல்லாமல் கூட செல்வார் ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார் என விமர்சித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com