திமுகவில் மீண்டும் இணைவது குறித்து மு.க.ஸ்டாலின்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி கூறியுள்ளார்.
மு.க.அழகிரி - உதயநிதி சந்திப்பு :
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெரியப்பாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
சால்வை அணிவித்து வாழ்த்து பெற்ற உதயநிதி :
டி.வி.எஸ். நகரில் உள்ள மு.க.அழகிரி தனது வீட்டு வாசலில் காத்திருந்து உதயநிதியை வரவேற்று அழைத்துச் சென்று இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது மு.க.அழகிரிக்கு உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அமைச்சரான பிறகு முதல் முறையாக மு.க. அழகிரியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்ய முடியும் :
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, தான் மீண்டும் திமுகவில் இணைவது குறித்து மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை சந்தித்தது எல்லையில்லா மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். இதன்மூலம் மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணைகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது.