"உதயநிதி கண்கலங்கியதை பார்த்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவர் எவ்வளவு இளகிய மனம் படைத்தவர் என்று" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரி நேற்று நடந்த திமுக இளைஞரணி போராட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். இப்போராட்டத்தில் அவர் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அவர் கண்கலங்கினார். இக்காட்சி ஊடகங்களில் வெளியாகியது. இதனை எதிர்க்கட்சிகள் நாடகம் என விமர்சிக்கத் தொடங்கினர். இந்நிலையில் இதனை மறுத்து அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளார்.
இந்து சமய அறநிலை துறையின் கீழ் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் திருப்பணி தொடக்க விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பிகே.சேகர்பாபு கலந்து கொண்டு திருப்பணியை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நீட் தேர்வினை தடைசெய்யும் மசோதாவை நிறைவேற்றி தர வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் ஒருவர்தான் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறினார்.
இப்படி இருக்க நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்றைய போராட்டத்தில் உதயநிதி கண்கலங்கியது நாடகமல்ல. அதிலிருந்தே அவரது இளகிய மனதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.